மன்னிப்புக் கடிதம் எழுதி வைத்து விட்டு சைக்கிளை எடுத்து சென்ற புலம்பெயர் தொழிலாளி

ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்புர் பகுதியில் இருந்து சைக்கிள் ஒன்றை திருடிச் சென்ற புலம்பெயர் தொழிலாளி, அதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிவைத்து விட்டுச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி மொஹம்மது இக்பால், ராஜஸ்தான் மாநிலம் பரத்புரில் பணியாற்றி வந்தார்.

ஊரடங்கு உத்தரவால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களைப் போலவே இவரும் வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த ஊர் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அப்போது, வழியில் ஒரு சைக்கிளை அவர் திருடிச் சென்றுள்ளார்.

போகும் வழியில் சைக்கிளை எடுத்துச் சென்றாலும், அந்த சைக்கிளின் உரிமையாளருக்கு ஒரு மன்னிப்புக் கடிதத்தையும் அவர் எழுதி வைத்துள்ளார்.

அதில், நான் ஏழைத் தொழிலாளி. உங்கள் சைக்கிளை எடுத்துச் செல்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள். பரேலி வரை சென்று சேர வேண்டும். என்னிடம் வேறு எந்த வசதியும் இல்லை.

என்னுடைய மாற்றுத்திறனாளி குழந்தையை அழைத்துச் செல்வதற்காக உங்கள் சைக்கிளை எடுத்துக் கொள்கிறேன் என்று எழுதி வைத்துச் சென்றுள்ளார்.

சைக்கிள் காணாமல் போன நிலையில், வீட்டைப் பெருக்கும் போது, இந்த மன்னிப்புக் கடிதம் அந்த வீட்டின் உரிமையாளருக்குக் கிடைத்துள்ளது.

இது இன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ஏதுமற்ற நிலையில், வேறு வழியில்லாமல் சைக்கிளை எடுத்துச் சென்றாலும், அதற்காக மன்னிப்புக் கேட்டிருக்கும் ஒரு புலம்பெயர் தொழிலாளியின் நேர்மை பலருக்கும் பிடித்திருக்கிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே