ஆண்களுக்கும் கத்தியின்றி, ரத்தமின்றி, எவ்வித தழும்புமின்றி இரண்டு மணி நேரத்தில் கருத்தடை – அமைச்சர் விஜயபாஸ்கர்

கருத்தடை சிகிச்சை செய்துக்கொள்ள ஆண்களும் முன்வரவேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் வித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் பரமசிவம், பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டி, இந்த பிரச்சனையை களைய, ஆண்கள் கருத்தடை சிகிச்சை செய்ய ஊக்குவிப்பதில் அரசிடம் ஏதேனும் திட்டமுள்ளதா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், நாட்டின் பொருளாதாரத்துக்கு மக்கள் தொகை கட்டுப்பாடு முக்கியம். கருத்தடை செய்ய தனியாக துறை அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு இரண்டு லட்சம் பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், ஆண்களுக்கும் கத்தியின்றி ரத்தமின்றி , எவ்வித தழும்புமின்றி, இரண்டு மணி நேரத்தில் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 2018 ஆம் ஆண்டு 80 பேருக்கும், 2019 ஆம் ஆண்டு 800 பேருக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

விருப்பமுள்ள, தகுதியுள்ள ஆண்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய தயாராக உள்ளதாகவும், கருத்தடை சிகிச்சை செய்துகொள்ள ஆண்கள் முன் வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

அமைச்சரின் இந்த பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே