டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் மேட்ச் பிக்ஸிங்: யுஏஇ அணியின் 2 வீரர்களுக்கு 8 ஆண்டுகள் தடை: ஐசிசி அதிரடி நடவடிக்கை

2019-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றில் மேட்ச் பிக்ஸிங் செய்ய முயன்ற ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அணி வீரர்கள் முகமது நவீத், ஷாய்மான் அன்வர் பட் ஆகியோருக்கு 8 ஆண்டுகள் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த தடை உத்தரவு கடந்த 2019, அக்டோபர் 16-ம் தேதி முதல் முன் தேதியிட்டு நடைமுறைக்கு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் முறைப்படி ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

முகமது நவீத் ஐக்கிய அமீரக அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். 33 வயதான முகமது நவீத் இதுவரை 39 ஒருநாள் போட்டிகள், 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 42 வயதான ஷாய்மான் அன்வர் பட் 40 ஒருநாள் ஆட்டங்களிலும், 32 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

ஐசிசி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பொது மேலாளர் அலெக்ஸ் மார்ஷல் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
முகமது நவீத், ஷாய்மான் அன்வர் இருவரும் ஐக்கிய அரபு அமீரக அணிக்காகச் சர்வதேச அளவில் விளையாடியவர்கள்.

முன்னாள் கேப்டனாகவும், முன்னணி பந்துவீச்சாளராகவும் நவீத் இருந்தார், அன்வர் தொடக்க ஆட்டக்காரராக இருந்தார். ஆனால், இருவரின் கிரிக்கெட் வாழ்க்கையும், மேட்ச் பிக்ஸர்ஸ்களால் அச்சுறுத்தலுக்கு ஆளானது.

ஆனால், அது குறித்து இருவரும் ஐசிசிக்குத் தெரிவிக்காமல், தங்கள் அணிக்கும், வீரர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், யுஏஇ கிரிக்கெட் அமைப்புக்கும் துரோகம் இழைத்து, ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஐசிசி ஒழுங்கு முறை விதி 2.1.1.ன்படி இருவரும் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட ஒப்புக்கொண்டதும், அதற்கான செயலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்களில் இரு வீரர்களும் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆதலால், இரு வீரர்களுக்கும் 8 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை 2019, அக்டோபர் 16-ம் தேதியிலிருந்தே நடைமுறைக்கு வரும். இந்தத் தடையைப் பின்பற்றி, தனிப்பட்ட தீர்ப்பாயங்களும் தடைவிதிக்கலாம்.

இவ்வாறு மார்ஷெல் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே