மம்தா என் தலையில் எட்டி உதைக்கலாம் – பிரதமர் மோடி

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல் 8 கட்டமாக (மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6, ஏப்ரல் 10, ஏப்ரல் 17, ஏப்ரல் 22, ஏப்ரல் 26, ஏப்ரல் 29) நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன.

இந்நிலையில் பாங்குராவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது, “ஊழல் இல்லாத அமைப்புகளைப் பெற, பாஜக அரசைக் கொண்டுவருவது முக்கியம். வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க, வங்காளத்திற்கு பாஜக அரசு அவசியம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி கேள்விகளைக் கேட்கிறார் மம்தா பானர்ஜி. இதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தான் அவரை 10 ஆண்டுகள் ஆட்சியில் வைத்திருந்தது. 

அவர் ஏற்கனவே வரவிருக்கும் தேர்தலில் தனது தோல்வியை பார்த்துவிட்டார். வங்காளத்திலுள்ள ஒவ்வொரு நபரும் எந்த அச்சமும் இல்லாமல் வாக்களிக்க வேண்டும்.

நான் அதிகமாக கேள்வி கேட்கும்போது, மம்தா பானர்ஜி அவர்களுக்கு கோபம் வருகிறது. என்னுடைய முகம் பிடிக்கவில்லை என்று மம்தா பானர்ஜி சொல்கிறார்.

ஜனநாயகத்தில், பொது சேவை தான் சோதனைக்கு உட்படுத்தப்படும் முகம் அல்ல.

மம்தா பானர்ஜியின் மக்கள் வங்காள வீதிகளில் கிராஃபிட்டியை உருவாக்குகிறார்கள். அதில் அவர் என் தலையை காலால் அடித்து கால்பந்து விளையாடுவது போல் உள்ளது.

வங்காள கலாச்சாரத்தையும் பாரம்பரியங்களையும் ஏன் அவமதிக்கிறீர்கள் மம்தா பானர்ஜி.

நீங்கள் விரும்பினால் என் தலையில் கால் வைத்து என்னை உதைக்கலாம். ஆனால் வங்காளத்தின் வளர்ச்சியையும் அதன் மக்களின் கனவுகளையும் உதைக்க நான் அனுமதிக்க மாட்டேன்” என்று பேசியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே