மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா நீட் நுழைவுத் தேர்வு அச்சம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையடுத்து, தமிழக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் நீட் தேர்வுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா(19) கடந்த ஆண்டு தேர்வு எழுதியபோதும் தேர்ச்சி பெறவில்லை.
இந்த ஆண்டு அதிக சிரத்தையுடன் படித்துள்ளார்.
இந்த ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்றால் என்ன செய்வது என்ற அச்சத்தில் மாணவி தூக்கிட்டுக் கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அச்சத்தினால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
”#NEET மாணவர்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா மரணம் முதல் ஜோதிஸ்ரீ துர்காவரை உணர முடிகிறது. மீண்டும் சொல்கிறேன்; தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் ஒரு தேர்வே அல்ல!,” என ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
மதுரை மாணவியின் இறப்பு வேதனை தருவதாக குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாணவர்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
”மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகத்திலுள்ள காவல் குடியிருப்பில் ஆறாம் அணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.முருகசுந்தரம் என்பவரது மகள் செல்வி ஜோதிஸ்ரீ துர்கா இன்று தற்கொலை செய்து கொண்டு இறந்தார் எனும் செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவச் செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம்,” என முதல்வர் தெரிவித்துள்ளார்.
தற்கொலை எண்ணத்தை மாணவர்கள் கைவிடவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
”கடந்த சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக, அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் நாளை நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மதுரை மாணவி ஜோதி துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு மன வேதனை அடைந்தேன்.
தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை முதலில் மாணவர்கள் கைவிட வேண்டும். தற்கொலை என்பது தீர்வல்ல,” என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அரியலூர் அனிதா தொடங்கி மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவரை இன்னும் எத்தனை உயிர்களை நீட் தேர்வுக்காக இழக்கப் போகிறோம் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
”மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். மாணவச் செல்வங்கள் மனஉறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றிபெறுவது நிச்சயம்.
நீட்டின் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல. மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே” என்று தெரிவித்துள்ளார் கனிமொழி.
நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் பதிவிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ” மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன? மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை!,” என தெரிவித்துள்ளார்.
“தமிழக மாணவர்களுக்கு நீட்டால் தொடர்ந்து பாதிப்பு வருவதை மத்திய அரசு உணர மறுக்கிறது. மரணங்களுக்கு மாநில அரசு வெறும் இரங்கல் தெரிவிக்கிறது;
நீட்டுக்கே இரங்கல் தெரிவிக்க வேண்டும்” என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
மாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.
மருத்துவராக வேண்டும் என்ற மாணவர்களின் கனவை நீட் தேர்வின் மூலம் மத்திய அரசு தகர்த்து வருவதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு, தனது அரசு பள்ளி ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்த ஆசிரியர் சபரிமாலா மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அவர் நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் போராட்டத்தை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெண் விடுதலை என்ற கட்சியை தொடங்கியுள்ள ஆசிரியர் சபரிமாலா, தற்கொலை முடிவை மாணவர்கள் கைவிடவேண்டும் என தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு தரும் அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றும்
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 16 மாணவர்கள் இறந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் ஆசிரியர் சபரிமாலா.