மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்ற தீபா தரப்பு கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் தமிழில் தலைவி என்ற பெயரில் இயக்குனர் ஏ.எல்.விஜய், இந்தியில் ஜெயா என்ற பெயரில் ஹைதரபாத்தை சேர்ந்த விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.

இதேபோல, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயின் என்ற இணையதள தொடரை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும், இணையதள தொடருக்கும் தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை வைத்து ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கி வெளியான குயின் இணையதள தொடர் நாளை முதல் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரினார்.

அதற்கு கௌதம் மேனன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே குயின் தொடர் வேறு மொழிகளில் வெளியாகி விட்டதாகவும்; அதன் தமிழ் வடிவம் தான் நாளை முதல் ஒளிபரப்பாக உள்ளதாகவும் வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் குயின் தொடரை தடை விதிக்க வேண்டும் என்ற தீபா தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே