மதுரை மேலூர் கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் குவாரி உரிமையாளர் பிஆர் பழனிசாமியின் விடுதலை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
பிஆர் பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுதலை செய்த மேலூர் நீதிமன்ற உத்தரவை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. மதுரை மாவட்டம் மேலூர், ஒத்தக்கடை, கீழவளவு, மேலவளவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பி ஆர் பழனிசாமி மற்றும் அவரது பங்குதாரர்கள் உள்ளிட்டோர் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் வழக்கு தொடரப்பட்டு மேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் இருந்து பி.ஆர்.பழனிசாமி உள்பட 3 பேர விடுவித்து மதுரை மேலூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அப்போதைய ஐஏஸ் அதிகாரி, அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மதுரை மாவட்ட ஆட்சியர், அரசு தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை , தொழில் அதிபர் பிஆர் பழனிசாமி உள்பட 3 பேரை விடுவித்ததை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி, அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவும் ரத்து செய்யப்படுவதாக மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.