கூடுதல் விலைக்கு மது விற்கக் கூடாது : உயர்நீதிமன்றம்

அரசு மதுபானக்கடைகளான டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான வழக்கில் அரசின் உறுதிமொழியை ஏற்று வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் முடித்து வைத்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டி பஞ்சாயத்து துணைத் தலைவர் குல்லு படையாச்சி தாக்கல் செய்த மனுவில், டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டில் 70 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கு ரசீதுகள் வழங்கப்படுவது இல்லை. கடந்த 2003-ஆம் ஆண்டு டாஸ்மாக் விதிப்படி, அரசு நிர்ணயித்த விலையில்தான் மதுபானங்களை விற்க வேண்டும்.

அதிக விலைக்கு விற்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு நிர்ணயித்த விலையில்தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? மதுபானங்கள் விற்பனை செய்யும் போது ரசீதுகள் கொடுக்கப்படுகிறதா? ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும் விலைப்பட்டியல் ஒட்டப்படுகிறதா?

அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பல்வேறு கேள்விகளை எழுப்பி டாஸ்மாக் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பதில்மனுவில், அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் பணியாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும், ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக இக்குற்றத்தில் ஈடுபடுவோர் பணி இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2020 ஆம் ஆண்டு மார்ச் வரை நடத்தப்பட்ட சோதனைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக சென்னையில் 2,129 வழக்குகளும், கோவையில் 1,487 வழக்குகளும், மதுரையில் 2,422 வழக்குகளும், சேலத்தில் 1,365 வழக்குகளும், திருச்சியில் 1,916 வழக்குகள் என மொத்தம் 9 ஆயிரத்து 319 வழக்குகள் கண்டறியப்பட்டது.

இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு தரப்பு பதில்மனுவை ஏற்றுக்கொண்டு, டாஸ்மாக் மதுபான கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே