கொரோனா நோய் தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி, அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்த அனுமதிக்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த அருண் போத்திராஜ் என்பர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்,” மதுரை சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன் ஒரு பகுதியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றைக் காரணம் காட்டி திருவிழாக்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மனமகிழ் மன்றங்கள், திரையரங்குகள் போன்றவை 50 சதவிகிதத்துடன் இயங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திருவிழாக்களுக்கு மட்டும் முழுமையாகத் தடை விதிப்பது ஏற்கத்தக்கதல்ல.
இதன் காரணமாக அதன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பெரும்பாலானவர்கள் ஏமாற்றமடைவார்கள்.
ஆகவே பக்தர்கள் இன்றி, அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்த அனுமதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு, கொரோனா தொற்று மிகத்தீவிரமாகப் பரவி வரும் சூழலில் இது எவ்வாறு சாத்தியம்? கொரோனா தொற்று பரவலைத் தவிர்க்கும், நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். அதோடு, வைகை ஆற்றில் தண்ணீரே இல்லை. வெறும் குப்பைகளே நிறைந்துள்ளது.
கொரோனா பரவல் மிகத்தீவிரமாகப் பரவி வரும் வரும் சூழலில், கட்டுப்பாடுகள் மேலும் அதிகப்படுத்தப்படலாம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், அழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி வழங்க இயலாது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.