உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சுவாரஸ்யங்கள்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஒன்றிய உறுப்பினர் தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் சுனில் வெற்றி பெற்றுள்ளார். அதன்மூலம் நாம் தமிழர் கட்சி தேர்தல் அரசியலில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சுற்றிய கோவில் குப்பம் மற்றும் வழுர் அகரம் ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் இரண்டு மனைவிகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

திருச்செந்தூர் ஒன்றியத்திலுள்ள பிச்சிவிளை ஊராட்சிமன்றம், ஆதி திராவிடர் வகுப்பு ஒதுக்கப்பட்டது. அதன் காரணமாக அப்பகுதிவாசிகள் தேர்தலைப் புறக்கணித்தனர். அதனால் 13 வாக்குகளே பதிவானது. அதில் 10 வாக்குகளைப் பெற்று ராஜேஸ்வரி வெற்றி பெற்றார்.

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பூவனூர் சுக்கம்பட்டி பஞ்சாயத்து 3-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க சார்பில் போட்டியிட்ட 22 வயது கல்லூரி மாணவி பிரித்தி மோகன் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தினார்.

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துகுட்பட்ட 8-வது வார்டில் பொறியியல் படித்த அரவிந்த் என்ற இளைஞர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம், தரைக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 73 வயது மூதாட்டி தங்கவேலு வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோல, மதுரையில் மேலூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அரிட்டாப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 79 வயது மூதாட்டி வீரம்மாள் வெற்றி பெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்துக்குட்பட்ட காட்டிநாயக்கந்தொட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 21 வயது கல்லூரி மாணவி வெற்றி பெற்றுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்த சரஸ்வரதி, அவரது அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு கான்சாபுரம் பஞ்சாயத்து தலைவராக வெற்றிபெற்றுள்ளார்.

தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய ஊர்களிலுள்ள கிராம பஞ்சாயத்துகளில் போட்டியிட்ட இருவர் ஒரே எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்ற நிலையில் குலுக்கல் முறையில் பஞ்சாயத்து தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே