மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வீதி வீதியாக சென்று பிரச்சாரம்..!!

காங்கிரஸுக்கு தேசிய சிந்தனையில்லை; குடும்பக் கட்சியாகி விட்டது. தன் குடும்ப நலனை மட்டுமே பார்க்கும் கட்சியிடம் புதுச்சேரியின் எதிர்காலத்தைத் தராதீர்கள் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

புதுச்சேரியில் இன்று மாலை மகளிர் அணி சார்பில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசியதாவது:

தமிழகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் புதுச்சேரியில் எப்போதும் தேசியக்கட்சியுடன் தொடர்பு உண்டு. தேசியக் கட்சியை விரோதியாக பார்க்காத கலாச்சாரம் புதுச்சேரிக்கு உண்டு.

சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸைக் கலைத்துவிட மகாத்மாகாந்தி கூறினார். 

அதை அக்கட்சியினர் கேட்கவில்லை. அக்கட்சி பலவிதங்களாக பிரிந்து தற்போது ஒரு துண்டு மட்டுமே உள்ளது.

தற்போதைய காங்கிரஸுக்கு தேசிய சிந்தனையில்லை . குடும்ப கட்சியாகிவிட்டது.

மக்கள் நலன் காக்க முடியாத அளவுக்கு காங்கிரஸ் சிதறி விட்டது. தற்போது நாட்டு நலனை சிந்திக்கக்கூடிய ஒரே கட்சி பாஜகதான். மத்திய அரசு திட்ட பலன்கள் மக்களுக்குக் கிடைக்காமல் அரசியல் நோக்கில் மேற்கு வங்க முதல்வர் செயல்பட்டது போலவே புதுச்சேரியிலும் நடந்தது.

இதுபோன்ற குறுகிய மனப்பான்மை கொண்ட தலைவர்கள் தேவையா என்ற கேள்வி எழுகிறது.

கீழ்த்தர அரசியல் எண்ணம் சில கட்சிகளுக்கு உள்ளது. ஒரு குடும்பத்தைத் தவிர யாருக்கும் வாய்ப்பு தராத கட்சி காங்கிரஸாக உள்ளது.

மத்தியில் தொடங்கி ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக தலைவர்கள், ஆட்சியாளர்கள் யார் என்பதைப் பார்த்தாலே புரியும்

.தன் குடும்ப நலனை மட்டுமே பார்க்கும் கட்சியிடம் புதுச்சேரியின் எதிர்காலத்தை தராதீர்கள். அது முன்னேற்றத்துக்கு வாய்ப்பாக அமையாது.

மாநிலத்தின் நலனைப் பார்க்காத அரசை ஆதரிக்காதீர்கள்.

தேர்தல் வாக்குறுதியில் ஒரு சதவீதத்தை கூட நிறைவேற்றாத காங்கிரஸ் இல்லாத ஆட்சியே தற்போது புதுச்சேரிக்கு தேவை” என்று குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே