நாடு முழுவதும் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்கை அணைத்துவிட்டு, தீபம் ஏற்றுமாறு பிரதமர் விடுத்த வேண்டுகோளை அடுத்து, பல இடங்களில் அகல் விளக்கு விற்பனை மும்முரமடைந்துள்ளது.
கொள்ளை நோயான கொரோனோ தடுப்பு நடவடிக்கையில், மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு நேற்று முன் தினம் சிறு வீடியோ மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், இன்று இரவு 9 மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
கொரோனா இருளை அகற்ற, வீட்டில் மின் விளக்கை அணைத்து விட்டு, அகல் விளக்கு, மெழுகுவர்த்திகளை ஏற்றலாம் என்றும், டார்ச் ஒளி மூலம் வீட்டின் வாசலில் நின்று ஒற்றுமையை உயர்த்தலாம் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார்.
இதனை அடுத்து டெல்லியில் வண்ணம் பூசப்பட்ட அகல் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஏராளமானோர் அவற்றை வாங்கிச் சென்றனர்.
இதே போல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், அகல் விளக்குகளை வாங்கி விளக்கேற்ற, மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.