ஸ்டாலினுக்கு தில் இருந்தா ரஜினியை தாக்கி பேசட்டும் – நடிகை குஷ்பு சவால்..!!

விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொள்வதாக பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறினார்.

மதுரையில் பாஜக சார்பில் விவசாயிகளின் நண்பர் மோடி என்ற விவசாயிகள் சந்திப்புக் கூட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் குஷ்பு பங்கேற்றார்.

ஊமச்சிகுளத்தில் விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு முன்பு குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”இந்தியாவில் 70 சதவீத விவசாயிகள் உள்ளனர். மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் விவசாயிகளைப் பாதுகாக்கும், விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தும்.

ஒன்றரை லட்சம் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கருத்து கேட்ட பிறகே வேளாண் மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

இந்த மசோதாக்களை தென் மாநில விவசாயிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் எதிர்க்கட்சிகள், இடைத்தரர்களின் தூண்டுதலால் விவசாயிகள் போராடுகின்றனர்.

டெல்லியில் 2018-ம் ஆண்டிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 2019 தேர்தலில் பாஜக மிகப்பெரியளவில் வெற்றி பெற்றது.

தற்போது விவசாயிகளைப் பயன்படுத்தி இடைத்தரர்கள் ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.

வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் இடைத்தரர்கள் சம்பாதிக்க முடியாது. விவசாயிகள் நேரடியாகப் பலனடைவார்கள்.

இதனால் இடைத்தரர்கள் போராட்டத்தைத் தூண்டி வருகின்றனர்.

மக்களும், விவசாயிகளும் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் ஒரு முடிவெடுத்தால் மக்களின் நலனுக்காகவே முடிவெடுப்பார் என மக்கள் நம்புகின்றனர்.

விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என எதிர்க்கட்சிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

எதிர்க்கட்சிகள் நல்ல விஷயமாக இருந்தாலும் எதிர்க்கின்றன. சிறுபான்மை பெண்களுக்குப் பாதுகாப்பான முத்தலாக் சட்டத்தை எதிர்த்தன.

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தன. இப்போது வேளாண் சட்டங்களை எதிர்க்கின்றன.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவைத் தோற்கடிக்க புதிய கட்சி தொடங்க சிலரைத் தூண்டுகிறார்கள் என ரஜினியை மு.க.ஸ்டாலின் மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.

மு.க.ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக தாக்கிப் பேசட்டும், பார்க்கலாம்.

கட்சி வாய்ப்பளித்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன். தேர்தலில் கமல், ரஜினி இருவரில் யார் வெற்றி பெறுவார் என்பதை இப்போது சொல்ல முடியாது.

இருவரும் களத்தில் குதிக்கட்டும். அதன் பிறகு பார்க்கலாம்.

அதிமுக அரசுக்கு எதிராக மக்களிடம் அதிருப்தி இல்லை. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை நான் ஏன் ஏற்க வேண்டும்.

அவரது கட்சிக்காரர்கள் ஏற்றுக்கொள்வார்கள். யார் முதல்வர் என்பதை இரு கட்சித் தலைவர்கள் பேசி முடிவெடுப்பர்.

பாஜகவில் எனது அரசியல் பணி சிறப்பாக உள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர் ராகுல் காந்தி தலைவராக வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டும், அவர் தலைவராகவில்லை.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானால் அடுத்த தேர்தலிலும் பாஜக கண்டிப்பாக வெற்றி பெறும்”.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் உடனிருந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே