பழம்பெரும் நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதி! 500 படங்களுக்கும் மேல் நடித்தவருக்கு தீவிர சிகிச்சை.

500 படங்களுக்கும் மேல் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் எக்கச்சக்கமான படங்கள் 60களில் துவங்கி நடித்துள்ளார் நடிகை கமலா குமாரி என்கிற ஜெயந்தி.

எம்ஜிஆர், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகை ஜெயந்தி இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது கணவரை பிரிந்துவிட்ட அவர் பெங்களூரில் தனது மகன் உடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஜெயந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி வெளியாகி உள்ளது. அதிக ஆஸ்த்மா, மூச்சுவிடுவதில் பிரச்சனைகள் இருந்ததால் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவருக்கு தற்போது வென்டிலேட்டர் பொருத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் அவருக்கு கொரோனா டெஸ்ட் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. அதனால் வருத்தத்தில் இருந்த அவரது ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் ஜெயந்தியின் மகன் கிருஷ்ண குமார் அளித்துள்ள பேட்டியில் ஜெயந்தியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவரது உடல் நிலை மிக சிறப்பாக முன்னேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு நடிகை ஜெயந்தி ஹம்பி அருகில் உள்ள இடத்தில் ஒரு ஹோட்டலில் தனது மகனுடன் இருந்த போது லாக்டவுன் போடப்பட்டதால் அங்கேயே சிக்கிக் கொண்டார். அதற்குப் பிறகு பெங்களூருக்கு ஒரு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு வரப்பட்டார். அதன் பின் அவரது வீட்டிற்கு கொண்டு சென்றனர். அதற்கு பிறகு தான் மீண்டும் அவரது உடல் நிலை மோசமானதால் தற்போது மருத்துவமனையில் மீண்டும் அனுமதித்துள்ளனர்.
சில வருடங்களுக்கு முன்பு ஜெயந்தி மிகத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் அவர் இறந்து விட்டார் என்று கூட வதந்திகள் பரவியது. அப்போது அது முற்றிலும் பொய்யான செய்தி என அவரது மகன் தான் விளக்கம் அளித்திருந்தார். கடந்த 35 வருடங்களாக ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ள ஜெயந்தி, தினமும் மருந்து மாத்திரைகள் எடுத்து வருகிறார் என அவரது மகன் கூறியிருந்தார்.

ஜெயந்தி சினிமாவில் நடித்த அந்த காலத்திலேயே மிகவும் தைரியமான ரோல்களில் நடித்தார். எம்ஜிஆருடன் படகோட்டி, முகராசி மற்றும் ஜெமினி கணேசனுடன் கண்ணா நலமா, வெள்ளிவிழா, புன்னகை, இருகோடுகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே