ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 62.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர்

திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான ஜெ.அன்பழகன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

அவரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம், தமிழக துணை முதல்வர்

சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுகவின் முன்னோடி நிர்வாகியுமான ஜெ.அன்பழகன் இன்று காலை மருத்துவ சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.

ஜெ.அன்பழகனின் பிரிவால் மீளாத்துயரில் இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

எஸ்.பி.வேலுமணி, அமைச்சர்

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன், இன்று உயிரிழந்தார் என்கிற செய்தி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

எல்.முருகன், தலைவர், தமிழக பாஜக

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

கே.எஸ்.அழகிரி, தலைவர், தமிழக காங்கிரஸ்

மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றிய ஜெ.அன்பழகன் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

திராவிட இயக்கத்தின் தொடக்க கால தளகர்த்தராக விளங்கிய தியாகராய நகர் பழக்கடை ஜெயராமனின் மகனான ஜெ.அன்பழகன் போர்க்குணம் மிக்க செயல்வீரராக விளங்கி வந்தவர்.

மனதில் பட்டதை துணிச்சலாக கூறக்கூடியவர்.

திமுக தலைமையின் நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்பட்டு வந்தவர். சோதனையான காலத்தில் உறுதியாக இருந்தவர்.

திமுக தலைமை இவரிடம் எத்தகைய பொறுப்பு வழங்கினாலும், குறிப்பாக பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களை நடத்துவதில் இவருக்கு நிகர் எவருமில்லை.

இவரது இறுதி காலத்தில் கூட கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வாரி வழங்கியவர். இவரது இறப்பு மிகுந்த வேதனையை தருகிறது.

ஜெ.அன்பழகன் அவர்கள் மறைவால் வாடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அவரது கட்சியினருக்கும், குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ், நிறுவனர், பாமக

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகளில் குறிப்பிடத்தக்கவரான ஜெ.அன்பழகன் பல்வேறு தருணங்களில் என்னை சந்தித்து பேசியுள்ளார். என் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.

பாமகவின் சமூகநீதி கொள்கைகளை பல நேரங்களில் வியந்து பேசியவர். சென்னையில் பாமக நிர்வாகிகளுடன் இனைந்து அரசியல் பணியாற்றியவர்; அரசியல் கடந்த நட்பை பராமரித்து வந்தவர்.

ஜெ.அன்பழகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திமுகவினருக்கும் பாமக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி ராமதாஸ், இளைஞரணித் தலைவர், பாமக

சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாவட்ட செயலருமான ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

தமிழக சட்டப்பேரவைக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். சிறந்த களப்பணியாளர்.

என் மீது பற்று கொண்டவர். அரசியலைக் கடந்து என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தார். பாமகவின் கொள்கைகள் மீது மதிப்பு கொண்டவர்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திமுகவினருக்கும் ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும்.

டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகனின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கரோனாவால் அவர் மறைந்தது நமது வேதனையை அதிகமாக்குகிறது.

கரோனா ஆபத்து சூழ்ந்துள்ள இந்த நேரத்தில், மக்கள் நல நிகழ்ச்சிகளில் கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை அரசியல் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன்.

அதன்படி தொடர்ந்து நடப்பதுதான் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

அவரது ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருநாவுக்கரசர் எம்.பி., காங்கிரஸ்

ஜெ. அன்பழகன் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது பிறந்த நாளான இன்று இயற்கை எய்திய செய்தி அறிந்து மனம் மிக வருந்துகிறேன்.

ஜெ. அன்பழகன் தைரியமும், துணிச்சலும், அன்பும், கடின உழைப்பும் விசுவாசமும் நிறைந்த இனிய சகோதரர். அவரது மறைவு திமுகவுக்கும் குறிப்பாக மு.க.ஸ்டாலினுக்கும் பேரிழப்பாகும்.

அவரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், திமுக தலைவர் மற்றும் தொண்டர்கள், தேர்ந்தெடுத்த தொகுதி மக்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை பெரும் துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சரத்குமார், தலைவர், சமத்துவ மக்கள் கட்சி

ஜெ.அன்பழகன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

ஜெ.அன்பழகனின் 62-வது பிறந்தநாளில் அவரது மறைவு செய்தியானது அவரது நலம் விரும்பிகளை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே