சொகுசு கப்பலில் போதைப் பொருள் பார்ட்டி நடந்த வழக்கு தொடர்பாக, பிரபல தயாரிப்பாளரின் வீடு மற்றும் அலுவலகங்களில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதைப் பொருள் பார்ட்டி நடப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு போலீசார், கடந்த 3 ஆம் தேதி அந்த கப்பலில், சாதாரண பயணிகள் போல சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது போதைப் பொருள் பயன்படுத்திய நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடன் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து போதைப் பொருள் வழக்கில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் உட்பட 8 பேரும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. இதில், அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதனால் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கில், இந்தி திரைப்பட தயாரிப்பாளர் இமிதியாஸ் கத்ரியின் (Imtiyaz Khatri) மும்பை பாந்த்ராவில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநர் சமீர் வாங்கடே, எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
பின்னர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் இன்று அங்கு ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று தெரிகிறது.
பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டபோது எழுந்த போதை பொருள் விவகாரத்திலும், தயாரிப்பாளர் இமிதியாஸ் கத்ரியின் பெயர் பரபரப்பாக அடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.