பேஸ்புக், இன்ஸ்டார்கிராம் சேவைகளில் 5 நாட்களுக்குள் 2வது முறையாக தடங்கல் ஏற்பட்டதற்கு பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
இந்தியா உட்பட உலகம் முழுவதும் கடந்த 4ம் தேதி பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் 6 மணி நேரம் வரை முடங்கின. இதற்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் வருத்தம் தெரிவித்தார். இதனால் பேஸ்புக் நிறுவன பங்குகளின் விலை சரிந்ததால் மார்க்கிற்கு 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு (அக்., 9) மீண்டும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசஞ்சரில் தடங்கள் ஏற்பட்டது.
இதற்கு பல வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். சிலர் மீம்ஸ் வெளியிட்டு கிண்டல் செய்தனர்.
இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம், ‘மனம் வருந்துகிறோம். இரண்டு மணி நேரங்களாக எங்களின் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிலருக்கு சிக்கல் ஏற்பட்டதை அறிந்தோம். உடனடியாக செயல்பட்டு அந்தச் சிக்கல் இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது. எல்லாம் இயல்புக்கு திரும்பிவிட்டது’ என, மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது.