அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதே கடினம்: கே.பாலகிருஷ்ணன் பேச்சு

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதே கடினம் என, பிரச்சாரக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகை ஒன்றியம் சிக்கல் மற்றும் கீழ்வேளூர் அடுத்த தேவூர் கடைவீதி ஆகிய இடங்களில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், கீழ்வேளூர் சட்டப்பேரவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி, நாகை சட்டப்பேரவை தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முகமது ஷாநவாஸ் ஆகியோரை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று இரவு (மார்ச் 30) வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதியாகி விட்டது. கடந்த 4 ஆண்டு கால அதிமுக ஆட்சிக் காலத்தில், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான ஆதார விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்குரிய நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கவில்லை.

நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வை குறைப்பதற்கு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. முதியோருக்கு வழங்கப்பட வேண்டிய உதவித்தொகையை கூட சரியாக வழங்கவில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 39 இடங்களில் போட்டியிட்டது. இதில், ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆனால், தற்போதுள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதே கடினம்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 122 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், மாநில ஆளுநரின் எதிப்பை மீறி கேரள மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்களை கிழித்து புதுச்சேரி மாநில முதல்வராக இருந்த நாராயணசாமி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். ஆனால், எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் வேடிக்கைப் பார்த்தவர் முதல்வர் பழனிசாமி.

அதிமுகவை ஊழல் அரசு என்று குற்றம்சாட்டியது பாமக. தமிழக முதல்வரையும், அமைச்சர்களையும் நிர்வாக திறனற்றவர்கள் என்று கேலியாக பேசியவர் அன்புமணி ராமதாஸ். ஆனால், தற்போது பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதற்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக கூறப்படுகிறது. இந்த இட ஒதுக்கீடு பாமகவுக்கு வேண்டுமானால் பயனுள்ளதாக இருக்குமே தவிர, எந்த வன்னியருக்கும் பயனுள்ளதாக அமையப் போவதில்லை.

தமிழகத்தில் பாஜகவை அனுமதித்து விடக்கூடாது. மீறி அனுமதித்தால் இந்திய மாநிலங்களில் தமிழகம் மிகவும் மோசமான நிலையை சந்திக்க நேரிடும். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி”.

இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே