கு.க செல்வம் குறித்து பேச ஒன்றும் இல்லை; அவரை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை – துரைமுருகன்

கு.க செல்வம் குறித்து பேச ஒன்றும் இல்லை; அவரை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுகவில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பதவி எதிர்பார்த்த கு.க.செல்வம் அந்த பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார். இதனால் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

நேற்று டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவில் இணையவில்லை. எனது தொகுதி பிரச்சனைகாக பியூஷ் கோயலை சந்தித்து பேசினேன். தமிழ் கடவுள் முருகனை பேசியவர்களை ஸ்டாலின் உடனடியாக கண்டிக்க வேண்டும்.

நல்லாட்சி நடத்தும் மோடியை விமர்சிக்கும் ராகுல்காந்தி தொடர்பை திமுக உடனடியாக துண்டிக்க வேண்டும். முடிந்தால் என் மீது நடவடிக்கை எடுங்கள் என்று சவால் விடுத்தார்.

இதையடுத்து ஆயிரம் விளக்கு எம்எல்ஏவான குக செல்வத்தை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில் சென்னை கமலாலயத்தில் பாஜக தலைவர்களை இன்று சந்தித்த குக செல்வம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, திமுகவில் வாரிசு அரசியல் இப்போது குடும்ப அரசியலாக மாறியுள்ளது என்றும் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கினாலும் தனக்கு கவலை இல்லை என்றும் கூறினார்.

ஏற்கனவே விபி துரைசாமி பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது கு க செல்வமும் இணைந்திருப்பது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அவர், எம்ஜிஆர், சம்பத், வைகோ போன்றவர்கள் பிரிந்து சென்றபோது, திமுக சிறிய இடர்பாடுகளை தான் சந்தித்தது.

தகரங்களான வி.பி.துரைசாமி கு.க.செல்வம் போன்றவர்கள் திமுகவை விட்டுச்செல்வதால் எந்த இடர்பாடும் இல்லை. கு.க.செல்வதற்கு ஒன்றும் தெரியாது. மக்களை ஈர்க்கும் சக்தி அவருக்கு இல்லை என்றார்.

கொரோனா பிரச்சனை குறித்து பேசிய துரைமுருகன், நான் சட்டமன்றத்தில் கொரோனா பிரச்சனை குறித்து பேசிய அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது.

10 நாளில் கொரோனா போய்விடும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னார். ஆனால் இதுவரை குறைந்தபாடில்லை என்றார்

இன்று நடந்த அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை குறித்து பேசிய துரைமுருகன், ராமர் கோயிலுக்கு அடிக்கால் நாட்டினால் மட்டுமே அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட முடியுமா? என்று கேள்வி எழுப்பியதுடன், அடுத்த தேர்தலின் போது அப்போதைய சூழல் தான் வெற்றியை தீர்மானிக்கும் என்றார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே