கனடாவின் கிங்மேக்கர் ஜக்மீத் சிங்

கனடா அரசியலில் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார் 40 வயது இளம் சீக்கியரான ஜக்மீத் சிங்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்மீத் சிங், கனடாவின் பிரதமரை தீர்மானிக்கும் அளவுக்கு வளர்ந்தது எப்படி?? என விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புதிய ஜனநாயகக் கட்சி தலைவரான ஜக்மீத் சிங்கின் ஆதரவை நாடி இருக்கிறார்.

இதன்மூலம் கனடாவின் கிங் மேக்கராக உருவெடுத்திருக்கிறார் ஜக்மீத் சிங். யார் இந்த ஜக்மீத் சிங் என்ற கேள்வியோடு அவருடைய பூர்வீகத்தை உலகமே உற்று நோக்க ஆரம்பித்து இருக்கிறது.

1979 ஆம் ஆண்டு கனடாவில் பிறந்த ஜக்மீத் சிங்கின் தாய், தந்தை இருவருமே இந்தியாவின் பஞ்சாப்யை பூர்வீகமாக கொண்டவர்கள்.

அவருடைய தாத்தா ஒரு இந்திய சுதந்திர போராட்ட தியாகி என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது கல்வி கட்டணம் உயர்த்தப்படுவதற்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் ஜக்மீத் சிங்.

இந்த போராட்ட குணமே ஜக்மீத் சிங்கை அரசியலை நோக்கி பயணப்பட வைத்தது.

2008ஆம் ஆண்டு புதிய ஜனநாயக கட்சியில் இணைந்து 2011ஆம் ஆண்டே ஒட்ராரியோ மாகாணத்தில் எம்பியாக தேர்வானார்.

அரசியலுக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் எம்பியான ஜக்மீத் சிங்கிற்கு அவருடைய அரசியல் ராஜதந்திர ங்களின் மூலம் 2018 ஆம் ஆண்டு புதிய ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பொறுப்பு தேடி வந்தது.

இதன் மூலம் கனடாவின் பெரிய அரசியல் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில்தான் கனடாவில் கடந்த பிப்ரவரி மாதம் பர்னபே தெற்கு நகர தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றபோது இதில் ஜக்மீத் சிங் வெற்றி பெற்றதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவி அவரைத் தேடி வந்தது. தலைவர் பதவியை ஏற்று கொண்ட சில மாதங்களிலேயே 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஜக்மீத் சிங் தலைமையில் புதிய ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது.

இளைஞர்களை அணி திரட்டுவதும், தலைமை பொறுப்பில் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்துவதும் தான் சமூக சீர்திருத்தங்களுக்கான முதலீடு என்பதை உணர்ந்துகொண்ட ஜக்மீத் சிங் இதற்காகவே இளைஞர்களை மையப்படுத்தி தனது பிரசாரங்களை முன்னெடுத்தார்.

முக்கியமான வாக்குறுதிகளை ராப் இசையோடு சேர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர், டிக்டாக் போன்ற சமூக வலைத்தளங்கள் வரை வீடியோக்களாக வெளியிட்டு இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்த இளம் ரத்தத்தின் புது அரசியல் உத்தி 24 எம்பிக்களை அக்கட்சிக்கு பெற்றுத் தந்ததோடு, எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைப்பதையும் தடுத்து இருக்கிறது.

ஏனெனில் 338 இடங்களைக் கொண்ட கனடா பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் 170 உறுப்பினர்கள் தேவை.

ஆனால் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா லிபரல் கட்சி வெறும் 157 எம்பிக்களை மட்டுமே பெற்று இருக்கிறது.

அதே சமயம் எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களில் மட்டுமே வெற்றியை பெற்றது.

எனவே ஆட்சி அமைக்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங்கின் ஆதரவை நாடி இருக்கிறார் ஜஸ்டின்.

இதன் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அரசியல் ஆளுமை கனடாவின் பிரதமர் யார் என்று கை காட்டும் அளவுக்கு வளர்ந்திருப்பது உலக அளவில் இந்தியர்களை பெருமை அடைய வைத்திருக்கிறது.

சமூக அவலங்களை தட்டிக் கேட்கத் தொடங்கிய ஜக்மீத் சிங்கின் பயணம் வழக்கறிஞர், எம்பி, எதிர்க்கட்சித் தலைவர் என்று பயணித்து தற்போது கேரளாவின் கிங் மேக்கராக பரிணமித்திருக்கிறது.

வெகு விரைவில் கனடா மக்கள் மனம் கவரும் பிரதமராகும் வாய்ப்பு கூட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங்கிற்கு இருக்கிறது என்று ஆருடம் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே