கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் நேமம் தொகுதியில் பாஜக முன்னாள் தலைவர் கும்மன் ராஜசேகரன் போட்டியிடுகிறார். பாலக்காடு தொகுதியில் மெட்ரோமென் ஸ்ரீதரனும், பிரபல மலையாள நடிகரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான் கடுமையான போட்டி இருந்து வருகிறது. பாஜக தனித்து போட்டியிடுகிறது.
2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணி களம் கண்டன. ஆனால் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் உள்ள வலிமை மிக்க ஈழவ சமூகம் சார்ந்த அரசியல் அமைப்பான பாரத் தர்ம ஜனசேனாவுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டது. 15.8 சதவீத வாக்குகளுடன், ஓரிடத்தில் பாஜக வென்றது.
கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே மட்டுமே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில் இந்த முறை தனது வாக்கு வங்கியை காண்பிக்கும் நோக்குடன் பாஜகவும் களமிறங்கியுள்ளது. இதற்கு ஏற்ப வேட்பாளர்களை தேர்வும் இருக்கும் என கருதப்படுகிறது.
இந்தநிலையில் தமிழகம், கேரளா, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் வேட்பாளர்கள் குறித்து இறுதி செய்ய பாஜகவின் மத்திய தேர்தல் குழு நேற்று மாலை கூடுகிறது.
பிரதமர் மோடி தலைமையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா, பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், உறுப்பினர்கள் ஆகியோர் கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தை தொடர்ந்து தமிழகம், கேரளா, புதுச்சேரி, உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று கேரள மாநில பாஜக பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 25 இடங்களில் 4 கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.
கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மஞ்சேஸ்வரம் மற்றும் கோனி தொகுதிகளில் களமிறங்குகிறார்.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்ற பாஜக வேட்பாளர்கள் வருமாறு:க்ஷ
பாலக்காடு: மெட்ரோமென் ஸ்ரீதரன்
நேமம்: கும்மன் ராஜசேகரன்
திருச்சூர்: நடிகர் சுரேஷ் கோபி
கஞ்சரபள்ளி: அல்போன்ஸ் கண்ணன்தானம், முன்னாள் மத்திய அமைச்சர்
திரூர் தொகுதி: அப்துல் சலாம்
இரிஞ்சாலக்குடா: ஜேக்கப் தாமஸ், முன்னாள் டிஜிபி