ஹாட்ரிக் : டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்  3ஆவது முறையாக டெல்லி முதலமைச்சராக  பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், டெல்லியிலுள்ள ராம்லீலா மைதானத்தில் பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சராக கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதன் பின்னர் மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், கோபால் ராய், கைலாஸ் கெலாட், இம்ரான் ஹுசேன், ராஜேந்திர கெளதம் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கும் துணை நிலை ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

பதவியேற்பு விழாவில் பேசிய கெஜ்ரிவால், தேர்தலில் கிடைத்த வெற்றி தன்னுடைய வெற்றி மட்டும் மல்ல டெல்லி மக்களின் வெற்றி என்றார். ஆம் ஆத்மிக்கு கிடைத்த வெற்றி, இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் தெரிவித்தார். 21ம் நூற்றாண்டுக்கான அரசியலை டெல்லி தொடங்கி வைத்துள்ளது என்றும், தேசிய அரசியலை டெல்லி அரசியல் மாற்றி விட்டது என்றும் அவர் கூறினார்.

பதவியேற்பு விழாவுக்கு அரசியல் தலைவர்கள், பிற மாநில முதலமைச்சர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள தமது சொந்த தொகுதியான வாராணசிக்கு பிரதமர் மோடி சென்றிருப்பதால், அவரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

பதவியேற்பு விழாவுக்கு டெல்லி மக்களுக்கு ஆம் ஆத்மி கட்சி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் ராம்லீலா மைதானத்தில் மக்களின் கூட்டம் அலைமோதியது. கெஜ்ரிவாலை புகழ்ந்தும், அவரது கட்சியை பாராட்டியும் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. 

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே