கர்நாடகாவில் நாளை இடைத்தேர்தல்…

நாளை நடைபெறும் கர்நாடகா இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 6 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதற்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 16 எம்எல்ஏ-க்கள் பாஜக-வில் இணைந்த நிலையில், அவர்களில் 13 பேரை பாஜக வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளது.

இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது.

அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் கடைசி கட்ட வாக்குசேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர்.

225 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் தற்போதைய நிலையில், 17 இடங்கள் காலியாக உள்ளன.

இதில் 15 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தற்போது பாஜக-வுக்கு 105 உறுப்பினர்கள் உள்ளனர். சுயேட்சை ஒருவர், பாஜக-வுக்கு ஆதரவு அளிக்கிறார்.

எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, காங்கிரஸுக்கு 66 உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 34 பேரும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒருவரும் உள்ளனர்.

இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 6 தொகுதிகளில் வெற்றிபெற்றால் தான் பாஜக-வுக்கு பெரும்பான்மை கிடைக்கும்.

இதனால் கடும் நெருக்கடியுடன் இந்த தேர்தலை பாஜக எதிர்கொள்கிறது.

இந்நிலையில் ஹுப்பாளி பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, 15 தொகுதிகளிலும் தாங்கள் எதிர்பார்த்ததைவிட, பாஜக-வுக்கு ஆதரவான அலை அதிக அளவில் வீசுவதாக தெரிவித்தார்.

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் மீண்டும் இணையும் என்று தலைவர்கள் கூறினாலும் அதற்கான சூழல் இல்லை என்றும் எடியூரப்பா கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே