அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சர்ச்சைக்கு காரணம் என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக பேசிய அசுரன் திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது.
பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அரசியலையும், ஆதிக்க வர்க்கத்தின் வன்மையையும் பொட்டில் அறைந்தது போல் பேசியது இந்த திரைப்படம்.
இப்படத்தில் இடம் பெற்றிருந்த ஆண்ட பரம்பரை என்ற வசனம் சர்ச்சைக்கு வித்திட்டது.
அக்குறிப்பிட்ட வசனம் தங்களது முக்குலத்தோர் சமூகத்தை இழிவு படுத்தியதாக இருப்பதால் படத்திலிருந்து இந்த வசனத்தை நீக்க வேண்டுமென முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ் கோரிக்கை வைத்திருந்தார்.
இதனை அடுத்து படத்தின் இயக்குனர் வெற்றிமாறனும் ஆசனம் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த குறிப்பிட்ட அந்த வசனத்தை நீக்கினார்.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.
அதில் ஒரு புகைப்படத்தில் பழைய காவல் நிலையம்போல வண்ணம் தீட்டப்பட்டதுடன், அதில் மணியாச்சி காவல் நிலையம் என்று எழுதப்பட்டிருந்தது.
தென் தமிழகத்தில் நடைபெற்ற கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி இப்படம் உருவாவதாக தகவல் பரவியது.
ஆனால், தற்போதுவரை படக்குழு இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.
நடிகரும் எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் நடத்தி வரும் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், 1991-ல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ‘கர்ணன்’ படத்தைத் தடை செய்ய வேண்டும் மற்றும் அந்த படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்குத் தடை விதிக்கவேண்டும் என வலியுறுத்தியது.
மேலும் இதுதொடர்பாக அந்த அமைப்பு நிர்வாகிகள் சார்பில் நெல்லை காவல்துறை சரக துணைத் தலைவரிடமும் புகார் மனு அளித்துள்ளனர்.
உண்மை நிகழ்வுகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் கர்ணன் திரைப்படத்திற்கு கருணாஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் படக்குழு என்ன செய்யப்போகிறது என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.
ஏற்கனவே உண்மை நிகழ்வுகளை வைத்து தமிழில் பல படங்கள் வெளிவந்த நிலையில் கர்ணன் படத்திற்கு மட்டும் எதிர்ப்பு ஏன் என்பது அப்படத்தை ஆதரிப்பவர்களின் கேள்வியாக உள்ளது.