கதறி அழுத பெண்ணை கட்டி அணைத்து ஆறுதல் கூறிய கனிமொழி..!!

பென்னாகரம் அருகே பட்டியலின சமூக பெண்களை ஆரத்தி எடுக்கக்கூட அனுமதிப்பதில்லை என கண்ணீர் மல்க கூறிய பெண்ணை, கட்டி தழுவிய திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கண்ணீர் விட்டு அழுதார்.

தருமபுரி மாவட்டத்தில், ‘விடியலைத்தேடி ஸ்டாலின் குரல்’ நிகழ்ச்சியின் 3 நாட்கள் சுற்றுப் பயணத்திற்காக திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கடந்த இரண்டு நாட்களாக தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, மூன்றாவது நாளாக இன்று பென்னாகரம் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ஏரியூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது இந்தக் கூட்டத்தில் பேசிய அபிதா என்ற பெண், எங்கள் பகுதியில் பட்டியலின பெண்களை ஒதுக்கி வைக்கின்றனர்.

தற்போது கூட உங்களை வரவேற்று ஆரத்தி எடுக்க மாற்று சாதியை சேர்ந்த பெண்கள்தான் இருந்தனர். எங்களை ஒதுக்கி வைக்கின்றனர் என கண்ணீர் மல்க கூறினார்.

இதனைப் பார்த்த கனிமொழி ஓடிவந்து அந்தப் பெண்ணை கட்டி அணைத்துக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து பேசிய எம்பி கனிமொழி, சமூகத்தில் ஒதுக்கப்படுகிறோம், ஒடுக்கப்படுகிறோம் என்ற நிலையிலிருப்பது, நமது பணியை இன்னும் வேகப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

வருகிற திமுக ஆட்சி இந்த பெண்களின் கண்ணீரை துடைப்பதற்காக பாடுபடும் எனத் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் கதறி கண்ணீர் விட்டதை கண்டு எம்பி கனிமொழியும் கண்கலங்கினார்.

இந்த சம்பவம் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் நெகழ்ச்சியடையச் செய்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே