ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜார்க்கண்ட்டில் முதலமைச்சர் ரகுவர்தாஸ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

தற்போதைய சட்டப்பேரவையில் பாஜக ஆளும் கட்சியாகவும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பிரதான எதிர்க்கட்சியாகவும் உள்ளன.

அனைத்து மாணவர்கள் சங்கம் காங்கிரஸ் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் தற்போது பிரதிநிதித்துவம் உள்ளது.

ஜார்க்கண்ட் மாநில அரசின் பதவிகாலம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ஐந்து கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், டிசம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

நவம்பர் 30, டிசம்பர் 7, 12, 16, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் உடனடியாக நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நாட்டிலேயே முதல் முறையாக தபால் வாக்கு அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் தலைமை ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே