காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 63 ஆயிரத்து 371 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 73 லட்சத்து 70 ஆயிரத்து 469 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டு மீண்டனர். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான், நிதின் கட்கரி உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டு மீண்டனர்.

இந்நிலையில் 71 வயதாகும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குலாம் நபி ஆசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘எனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆதலால், நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் கடந்த சில நாட்களாகத் தொடர்பில் இருந்தோர், தயவுசெய்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகமது படேல், மோதிலால் வோரா, அபிஷேக் சிங்வி ஆகியோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் அபிஷேக் சிங்வி மட்டும் கரோனாவிலிருந்து மீண்டுள்ளார். மற்றவர்கள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே