செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மைசூரு பல்கலை.யுடன் இணைத்தால் தமிழக அரசு அதை முறியடிக்கும்..!!

மைசூரு பல்கலைக்கழகத்துடன் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இணைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து தமிழக அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதையடுத்து தமிழ்மொழி குறித்து பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து முன்னெடுக்கும் விதமாக திமுகவின் முன்னெடுப்பில் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசால் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் உருவாக்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மத்திய பாஜக அரசானது செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு உரிய நிதி ஒதுக்குதல் மற்றும் அதற்குரிய பதவிகளை பூர்த்தி செய்தல் ஆகியவற்றில் அக்கறை செலுத்துவதில்லை என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

தற்போது மைசூரு பல்கலைக்கழகத்துடன் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இணைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அவ்வாறு வெளியான தகவல்கள் குறித்து மாநில தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மைசூரு பல்கலைக்கழகத்துடன் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இணைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல என்றும்; அப்படி ஒரு முயற்சி நடந்தால் தமிழக அரசு அதனை முறியடிக்கும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே