மோடியை கடுமையாகச் சாடிய கமல்ஹாசன்

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில் கமல் கூறியுள்ளதாவது: இந்த கடிதத்தை பொறுப்புள்ள குடிமகனாகவும் , அதே சமயம் நாட்டின் பாதிக்கப்பட்ட குடிமகனாகவும் எழுதுகிறேன்.

முறையாக திட்டமிடப்படாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவிற்கு அவகாசம் கொடுக்கப்படவில்லை.

இந்த நெருக்கடியான காலத்தில், 140 கோடி கோடி மக்கள், இன்று வரை உங்களை நம்பி உங்கள் வழிகாட்டுதலை பின்பற்றி வருகின்றனர்.

ஒரு தலைவர் சொன்னவுடன் இத்தனை கோடி மக்கள் கேட்கிறார்கள் என்றால், அந்த வாய்ப்பு உங்களை தவிர உலகில் வேறு எந்த தலைவருக்கும் இல்லை.

நீங்கள் சொன்னால் செய்கிறார்கள் கொரோனாவை ஒழிக்க இரவு, பகல் பாராமல் பணியாற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கை தட்டுங்கள் என்றவுடன் அனைவரும் அதை செய்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஏழைகள், முறையாக திட்டமிடப்படாத ஊரடங்கால் தங்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஏழைகளின் துயரை துடைக்க உங்களை தவிர வேறு யாரும் இல்லை. பணமதிப்பிழப்பு போல் நீங்கள் மீண்டும் ஒரு ஊரடங்கு தவறை செய்துள்ளீர்கள்.

ஒரு பக்கம் அனைவரையும் விளக்கு ஏற்றுமாறு நீங்கள் கேட்டுக் கொள்கிறீர்கள். மறுபக்கம் ஏழைகள் தங்களின் இயலாதனத்தை எண்ணி வருந்துகிறார்கள்.

பால்கனியில் விளக்கு ஏற்றுமாறு நீங்கள் கேட்டு கொண்டிருந்த நிலையில், ஏழைகளோ அடுத்த வேளை உணவான சப்பாத்திக்கு செய்ய போதுமான எண்ணெய் இல்லாமல் போராடுகிறார்கள்.

கடந்த இரு முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நீங்கள் இந்த கடினமான சூழலில் பிரச்சனைகளை சந்திக்கும் மக்களை சமாதானபடுத்தும் முயற்சியில் இறங்கினீர்கள்.

இந்த சமுகத்தின் மிகப் பெரும்பான்மை மக்களான ஏழைகளை புறக்கணிப்பதன் மூலம், பால்கனி கொண்டுள்ள மக்களுக்கான பால்கனி அரசாக மட்டும் நீங்கள் இருக்க விரும்பமாட்டீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஏழைகள் ஒருபோதும் செய்தித் தாளின் முதல் பக்க செய்தியாக இருக்க மாட்டார்கள்.

ஆனால், தேசத்தின் கட்டுமானத்தில் அதன் உள்நாட்டு உற்பத்தியிலும், அதன் உத்வேகத்திலும் அவர்களுக்கு இருக்கும் பங்கை புறக்கணிக்க முடியாது.

அவர்கள்தான் இந்த தேசத்தின் அதிகப்பட்ச பங்கைக் கொண்டுள்ளனர்.

அடிமட்டத்தை தகர்க்க நினைக்கும் எந்த முயற்சியும் உயர்மட்டத்தைக் கவிழ்ப்பதற்குதான் வழி வகுக்கும் என்பதை வரலாறுகள் உணர்த்தியுள்ளன.

அதனை அறிவியலும் ஒப்புக்கொள்ளும்.

உயர்மட்டச் சமூகம், அடிமட்ட மக்களின் மீது ஏற்படுத்திய முதல் தொற்றுநோய் இது. இதுவரையில், நம்முடைய முன் பாடங்களிலிருந்து நாம் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை.

உங்களுக்கு நான்கு மாத காலம் அவகாசம் இருந்தபோது, 1.4 பில்லியன் மக்களை ஊரடங்கில் இருக்கச் சொல்வதற்கு நீங்கள் வெறும் நான்கு மணி நேரம் தான் அவகாசம் கொடுத்துள்ளீர்கள்.

ஒரு பிரச்சனை பெரிதாவதற்கு முன்பே தொலைநோக்குப் பார்வையுள்ள தலைவர்கள் தீர்வுக்காக உழைக்கத் தொடங்கிவிடுவார்கள்.

இந்தமுறை உங்களுடைய தொலைநோக்குப் பார்வை தோல்வியடைந்துவிட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்காக என்னை யார்வேண்டுமானாலும் தேசவிரோதி என்று அழைத்துக்கொள்ளலாம்.

நாங்கள் கோபத்தில் உள்ளோம். ஆனால், இன்னமும் உங்கள் பக்கம் உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே