“இரட்டை இலை” கதை சொல்லி வாக்கு சேகரித்தார் கமல்ஹாசன்..!!

சேலம் தாதகாபட்டியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், எம்ஜிஆர் தொடங்கியதே மூன்றாவது அணிதான் என்று பேசினார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

மூன்றாவது அணி வென்றதில்லை என்கிறார்கள். அப்படிப்பார்த்தால் எம்ஜிஆர் தொடங்கியதே மூன்றாவது அணி தான்.

அந்த மூன்றாவது அணிதான் ஆட்சியைப் பிடித்து 13 ஆண்டுகள் மற்ற கட்சிகளை வனவாசம் போகச் செய்தது.

இப்போது எனக்கு இன்னொரு கதையும் நினைவுக்கு வருகிறது. எம்ஜிஆர் வெற்றியை அந்த இலை நாங்கள் சாப்பிட்ட இலை என்று சிலர் விமர்சித்தனர்.

அதற்கு அவர், எங்களுக்கு வீட்டில் உணவு இருக்கிறது. அந்த இலையில் நீங்கள் எவ்வளவு சாப்பிடிருக்கிறீர்கள் என்று பார்க்க வந்திருக்கிறோம் எனப் பதிலடி கொடுத்தார்.

இன்று அந்த இலையில் இரண்டு பேர் விருந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர் கண்ட கனவை பின்னுக்குத் ள்ளிவிட்டார்கள்.

ஆனால், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அரசியல் தொழில் அல்ல. அரசியல் எங்களின் கடமை. மக்கள் வாழும் இடம் தான் எனக்கு கோயில், மக்கள் தான் என் மதம்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

கமல்ஹாசன் எப்போதுமே எம்ஜிஆரை கொண்டாடி, உரிமை கொண்டாடுபவர் தான்.

ஏற்கெனவே அவர் தனது ட்விட்டரில், “புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும்” என்று பதிவிட்டு எம்ஜிஆர் தனக்கு நெற்றியில் முத்தமிட்ட வீடியோவைப் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே