கொரோனா 2-வது அலை வீசும் அபாயம்.. மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!!

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தொற்று பரவி வருகிறது.

இந்த பாதிப்பு வேகமெடுத்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கமும் அமல்படுத்தப்பட்டது.

இந்த தொற்றை வேரறுக்கும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், இந்த பணிகளில் பிரதமர் மோடியும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

குறிப்பாக மாநில முதல்-மந்திரிகளுடன் அடிக்கடி கலந்துரையாடல் நடத்தி அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டறியும் அவர், இது தொடர்பாக அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாரானவுடன் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. 

அப்போதும் மாநில முதல்-மந்திரிகளை காணொலி காட்சி மூலம் சந்தித்த பிரதமர் மோடி, தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்த நிலையில் இந்தியாவில் சமீப நாட்களாக தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதைப்போல நாடு முழுவதும் தடுப்பூசி பணிகளும் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது.

அந்தவகையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

வேகமாக நடந்து வரும் தடுப்பூசி பணிகளால் நாட்டில் இதுவரை தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை எட்டிவிட்டது.

இந்த சூழலில் பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) மீண்டும் மாநில முதல்-மந்திரிகளுடன் கலந்துரையாடல் நடத்த உள்ளார்.

காணொலி காட்சி மூலம் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை அவர் கேட்டறிகிறார்.

மேலும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் அவர் ஆய்வு நடத்துகிறார்.

பின்னர் தொற்று பரவலை குறைப்பதற்கான ஆலோசனைகளையும், தடுப்பூசி போடும் பணிகளை மேலும் வேகப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் அவர் வழங்குவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

நாடு முழுவதும் சரிந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே