கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 5,76,343 ஆண் வாக்காளர்கள், 5,81,132 பெண் வாக்காளர்கள், 65 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 11,57,540 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 18 வயது நிரம்பிய, முதல் முறை இளம் வாக்காளர்கள் 29,771 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதல் முறை வாக்காளர்களுக்கு, ‘இ-எபிக்’ எனப்படும் மின்னணு வாக்காளர் அட்டையை வழங்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ‘இ-எபிக்’ மின்னணு வாக்காளர் அட்டை முதல் முறை இளம் வாக்காளர்களுக்கு மட்டுமே முதற்கட்டமாக வழங்கப்படுகிறது.
அடுத்தடுத்த கட்டங்களில், அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
‘இ-எபிக்’ தேவைப்படும் முதல் முறை இளம் வாக்காளர்கள், தேர்தல் ஆணையத்தின் www.nvsp.in இணையதளத்தில், பதிவு செய்து மொபைல் போன் எண் அல்லது இ-மெயில் ஐடி கொடுத்து உள்நுழைந்து, ‘இ-எபிக்’ டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
மேலும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்ச் 13, 14 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்வதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இந்த முகாம்களில் சிறப்புச் சுருக்க முறை திருத்தம் 2021-ல் பதிவு செய்து கொண்ட இளம் வாக்காளர்கள் சிறப்பு முகாம்களில் தங்களது பதிவு பெற்ற மொபைல் போன் எண்ணைத் தெரிவித்து மின்னணு வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.