கமல்ஹாசன், வானதி தொகுதிக்கு வெளியாட்கள் – மயூரா ஜெயக்குமார் விமர்சனம்..!!

கோவை தெற்கு தொகுதிக்குக் கமல்ஹாசன், வானதி ஆகியோர் வெளியாட்கள் என்று அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக- பாஜக கூட்டணியில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அதன் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் களம் காண்கிறார். அவரிடம் மும்முனைப் போட்டி குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடர்பாகத் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:

”இது கடும் போட்டி என்று பார்த்துவிட முடியாது. ஒரு சினிமா நட்சத்திரம் இங்கு வந்து போட்டியிடுவதால் ஊடகக் கவனம் பெற்றுள்ளது. 234 தொகுதிகளில் தனித்தனியே போட்டியிடும் பலர் மக்கள் சேவை ஆற்றியவர்கள்.

ஆனால், கமல் அப்படிப்பட்டவர் இல்லை. நிச்சயம் கமல்ஹாசனால் கோடம்பாக்கத்தைக் கோவைக்கு மாற்றிவிட முடியாது.

தேர்தல் முடிந்தவுடன் அவர் சென்னைக்குப் போய்விடுவார். அவரை அணுக முடியாது. யாரும் போய்ப் பேச முடியாது. ஆனால், நான் எம்எல்ஏவாக மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன்.

பாஜக வேட்பாளர் ஒரு தேசியக் கட்சியின் தேசிய மகளிரணித் தலைவர். அவர் டெல்லியில் இருப்பாரா, கோவையில் இருப்பாரா என்பதை மக்கள் நிச்சயமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவர் இருக்க வேண்டிய இடத்தையும் கோவைக்கு மாற்றிவிட முடியாது.

ஆனால், நான் அப்படியல்ல. கோவையில்தான் பிறந்தேன், வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கடைசி மூச்சு வரை என் தொகுதி மக்களுக்காகப் பணியாற்றுவேன். மண்ணின் மைந்தன் நான். அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன்.”

இவ்வாறு மயூரா ஜெயக்குமார் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே