வாக்குச்சாவடியில் திமுக – அதிமுகவினர் இடையே தள்ளு முள்ளு..!!

ராணிப்பேட்டை அரசுப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், திமுக அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அந்த வகையில்,இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.வாக்குப்பதிவானது,இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.ஓரிரு இடங்களில் வாக்குப்பதிவில் சிக்கல் ஏற்பட்டது.

குறிப்பாக,கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் செங்குறிச்சி பகுதியில் தனி வார்டு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர். தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த வாக்களர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,ராணிப்பேட்டை சிப்காட்டை சுற்றிய பகுதியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு செய்துவிட்டு சென்றார். இந்த வாக்குச்சாவடி மையத்தில், தேர்தல் நடைபெறும் இடத்திலிருந்து 100 மீட்டர் இடைவெளிக்குட்பட்டே திமுக பிரசார நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.ஆனால்,ஆட்சியர் அதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை எனக்கூறி, அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால்,ராணிப்பேட்டை அரசுப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில்,திமுக அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியில் திமுக வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதாகக் கூறி இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால், வாக்குப்பதிவு தாமதமானது.

இதனையடுத்து,வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக அதிமுகவினரை காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,அங்கு வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில்,மாநில தேர்தல் ஆணையம், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், எந்த அசம்பாவிதமும் இன்றி தேர்தல் நடைபெற்று வருவதாகவும் தகவல் அளித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே