JUST IN : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் எஸ்.ஏ. போப்டே!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. போப்டே இன்று பதவியேற்றார்.

உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக இன்று காலை 9.30 மணிக்கு போப்டே பொறுப்பேற்றார்.

அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தலைமை நீதிபதியாக பதவியேற்ற எஸ்.ஏ. போப்டே 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த பதவியில் நீடிப்பார்.

பதவியேற்றதைத் தொடர்ந்து தனது தாயாரிடம் எஸ்.ஏ.போப்டே ஆசிபெற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

1956-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்த போப்டே சுமார் 21 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார்.

2000 -ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2012-ம் ஆண்டு மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் அண்மையில் தீர்ப்பு வெளியான அயோத்தி வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்தவர் எஸ்.ஏ. போப்டே என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே