விடுதி கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் 144 தடை உத்தரவையும் மீறி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து மாணவர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
போராட்டத்தின் எதிரொலியாக உயர்த்தப்பட்ட கட்டணத்தை 50 சதவீதம் குறைத்தும், அதனை ஏற்காத மாணவர்கள் கட்டண உயர்வு முழுவதுமாக திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, கவனத்தை ஈர்க்கும் வகையில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்வதாக ஏற்கெனவே மாணவர்கள் அறிவித்தனர்.
அதனால் பல்கலைக்கழகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் தடையை மீறி மாணவர்கள் பேரணியை தொடர்ந்ததால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனிடையே ஜே.என்.யூ. மாணவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மூவர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
இக்குழுவில் யூஜிசி முன்னாள் தலைவர் வி.எஸ். சவுகான், ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் அனில் சகஸ்ரபுதே, யூஜிசி செயலாளர் பேராசிரியர் ரஜினிஸ் ஜெயின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.