இந்த ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பலர் பாதிக்கப்படுகின்றனர். அதாவது படிப்பில் கவனமின்மை, அதிகப்படியான கோபம், மன அழுத்தம், தூக்கமின்மை, உடல் எடை அதிகரிப்பு, பார்வை கோளாறு, கழுத்து வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி பணத்தை இழந்து, தற்கொலைக்கு தூண்டும் எண்ணத்தை கைவிட்டு அதிலிருந்து மீள்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன், அனைவருமே பயன்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. ஒரு ஸ்மார்ட்போனை கையில் வைத்துக் கொண்டு ஏராளமான வேலைகளை எளிதில் செய்து முடிக்க முடிகிறது. இதனால், ஆன்லைன் வாழ்க்கைக்கு பலரும் மாற தொடங்கி விட்டனர்.
கரண்ட் பில் கட்டுவதில் இருந்து வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவது வரை அனைத்தையும் ஆன்லைனில் எளிதில் முடித்துவிட முடிகிறது.
இது ஒருபுறமிருக்க மறுபுறம் சிறுவர்களும், இளைஞர்களும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி வருகின்றனர்.
பப்ஜி, ஃப்ரீ பையர், ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் கிரிக்கெட் போன்றவற்றிற்கு பலர் அடிமையாகி, இதன் விளைவாக சிலர் தற்கொலை செய்து கொண்டதும் உண்டு.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பள்ளி மாணவர்களே அதிகம் அடிமையாகின்றனர். குறிப்பாக ஊரடங்கு காலகட்டத்திற்கு பிறகு இந்த விளையாட்டுகளை விளையாடுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
படிப்பில் கவனம் செலுத்துவதை விட இந்த விளையாட்டில் தான் மாணவர்கள் அதிக கவனத்தை செலுத்துகின்றனர்.
இந்த ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பலர் பாதிக்கப்படுகின்றனர். அதாவது படிப்பில் கவனமின்மை, அதிகப்படியான கோபம், மன அழுத்தம், தூக்கமின்மை, உடல் எடை அதிகரிப்பு, பார்வை கோளாறு, கழுத்து வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்காமல் தனிமையை உணர்வார்கள். ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரத்தை குறைத்து வேறு எதிலாவது கவனத்தை செலுத்த வைக்க வேண்டும்.
பெற்றோர்கள் சிறிது காலத்திற்கு குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு டாஸ்க் கொடுத்து அவர்களை எப்போதும் பிஸியாக வைத்திருக்க வேண்டும். இதனால் அவர்களுக்கு விளையாட நேரம் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக அந்த விளையாட்டில் இருந்து வெளியே வந்து விடுவார்கள்.
அதைப்போன்று வீட்டிலிருந்து விளையாடுவதை விட வெளியில் சென்று நண்பர்களுடன் விளையாட தொடங்க வேண்டும்.
எளிதில் அதிக பணத்தை சம்பாதித்து விடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி ஆன்லைன் ரம்மி பலரை தன் வசப்படுத்தியுள்ளது. அதேபோன்று ஐபிஎல் தொடங்கிவிட்டாலே பல செயலிகள் ஆன்லைன் கிரிக்கெட்டிற்கு விளம்பரம் செய்யத் தொடங்கி இளைஞர்களை சிக்கவைக்கும்.
ஆன்லைன் ரம்மி மற்றும் கிரிக்கெட் என இரண்டிலுமே குறைந்த முதலீடு என்று தொடங்கி சிறுசிறு வெற்றிகளை பயனர்களுக்கு கொடுக்கும். இதனால் பெரிய அளவில் பணத்தைப் பார்த்து விடலாம் என்று நம்பி இந்த விளையாட்டுகளை பலர் தொடர்வார்கள்.
இந்த விளையாட்டுகள் தொடர்பான செயலிகளில் பயனர்களுக்கு எதிர்ப்புறம் விளையாடுவது மனிதர்கள் கிடையாது. அது ஒரு மென்பொருள் என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை.
ஆரம்பத்தில் வெற்றிகளை கொடுக்கும் அந்த மென்பொருள் நீங்கள் விளையாடும் வேகத்தையும் பணத்தை முதலீடு செய்யும் வேகத்தையும் கவனிக்கும்.
இதை வைத்து நீங்கள் அந்த விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு தனது வேலையைக் காட்டத் தொடங்கும்.
அதாவது ஆரம்பத்தில் சிறுசிறு வெற்றிகளை கொடுத்த விளையாட்டுக்கள் நீங்கள் அடிமையாகியதை உறுதி செய்த பிறகு பெரிய தொகைகளை உங்களுக்கு கொடுக்க தொடங்கும் அதிக பணத்தை முதலீடு செய்ய தூண்டும்.
இந்த விளையாட்டிற்கு அடிமையானவர்கள் கடன் வாங்குவது, திருடுவது, வீட்டில் பணம் கேட்பது போன்றவற்றை தொடர்ந்து செய்வார்கள். அதோடு உச்சகட்டமாக ஒரு கட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலையும் செய்து கொள்வார்கள்.
மேலும் இந்த விளையாட்டுகளில் ஈடுபடும் பயனர்கள் அந்த செயலியில் தங்களது சுய விவரம் மட்டுமல்லாது, வங்கி விவரத்தையும் உள்ளீடு செய்து வைத்திருப்பார்கள். இந்த தகவல்கள் வேறு நபர்களுக்கு விற்கப்பட்டால் மற்றொரு பாதையில் பண இழப்பிற்கு வழிவகுக்கும்.
ஆன்லைன் கிரிக்கெட் மற்றும் ரம்மியை பொறுத்தவரை மனதளவில் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அந்த விளையாட்டுகளுக்கு அடிமையாகின்றனர்.
அவர்கள் அதிலிருந்து மீள வேண்டும் என்றால் தங்களின் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு வேறு எதிலாவது கவனம் செலுத்தலாம்.
அதிக நேரம் குடும்பத்தினருடன் உரையாடலாம். விளையாடுவதற்கு நேரமில்லாத அளவுக்கு ஏதேனும் ஒரு வேலையை செய்யலாம். இல்லையென்றால், மனநல மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.