அரசுப் பள்ளிகளில் இனி ஆங்கில வழிக்கல்வி- சர்ச்சையாகும் ஜெகன் மோகன் அறிவிப்பு

ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்களிடம் தனி கவனம் பெற்று வருகிறார்.

  • குறிப்பாக இளைஞர்களுக்கான அரசு வேலை,
  • சத்துணவு ஊழியர்களுக்கான சம்பளத்தொகை உயர்வு,
  • ரேஷன் பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்கே சென்று விநியோகிக்கும் திட்டம்,
  • மாநில போக்குவரத்துக் கழகத்தை அரசே நடத்தும் என்ற முடிவு,
  • காவலர்களுக்கும் வார விடுமுறை போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அந்த நடவடிக்கைகளின் வரிசையில் தற்போது ஆந்திர அரசு ஒரு அதிரடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு மற்றும் உருது மொழி வழிக் கல்வி கற்பிக்கும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த அரசு பள்ளிகளை அடுத்த கல்வியாண்டு முதல் ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதாவது இந்த ஆங்கில வழிக் கல்வி முறையானது 2020 – 2021ஆம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையும், 2021-2022 ஆம் கல்வியாண்டில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதற்கான ஆணையை அம்மாநில பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த ஆணைக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அவர்களில் சிலர் கூறும்போது தாய்மொழி வழியில் ஆரம்பக் கல்வி கற்றால்தான் குழந்தைகள் எளிதாக பாடங்களை கற்க முடியும் என்றும், அத்துடன் பல தேசிய மற்றும் சர்வதேச கல்விக் குழுக்கள் ஆரம்ப கல்வியை மாணவர்கள் தங்களின் தாய்மொழிவழியில் படித்தால்தான் சிறந்தது என பரிந்துரைக்கின்றனர் என்றும் கூறியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ், நாங்கள் அரசு பள்ளிகளில் இருந்து தெலுங்கு மற்றும் உருதுவை நீக்கவில்லை என்றும், இந்த இரண்டு மொழியும் கட்டாயமாக அரசு பள்ளியில் கற்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இது மட்டுமல்லாமல் பெருவாரியான மக்கள் தங்கள் குழந்தைகள் ஆங்கில வழியில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர்.

ஆகவேதான் நாங்கள் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை கொண்டு வந்துள்ளோம் என்றும் இதன் மூலம் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் இதற்காக ஆசிரியர்களுக்கு ஆங்கில வழியில் பிரத்யேக பயிற்சி அளிக்கப்படும் என்றும் ஆங்கில பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே