நட்சத்திரங்களை விட புதுமுகங்களை இயக்குவதுதான் எனக்கு எளிது: பிரபு சாலமன்

பெரிய நட்சத்திரங்களை இயக்குவதை விட புதுமுகங்களை இயக்குவதுதான் தனக்கு எளிதாக இருப்பதாக இயக்குநர் பிரபு சாலமன் கூறியுள்ளார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் ‘காடன்’ திரைப்படம் நாளை (மார்ச் 26) வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில், ராணா கதாநாயகனாக நடிக்க இப்படம் உருவாகியுள்ளது. முன்னதாக தனுஷை வைத்து ‘தொடரி’ படத்தை பிரபு சாலமன் இயக்கியிருந்தார். ஆனால், அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

பெரிய நட்சத்திரங்களை வைத்து ஏன் வெற்றி கொடுக்க முடியவில்லை என்கிற கேள்விக்கு பதில் சொல்லியிருக்கும் பிரபு சாலமன், “நட்சத்திரங்கள் என்று வரும்போது அவர்களுக்கென ஒரு இமேஜ் உள்ளது. அதற்காக எதையும் செய்யாதபோது விமர்சிக்கப்படுகிறோம். மிகையாகச் செய்யும்போது யதார்த்தம் காணாமல் போகிறது. அந்தக் குழப்பம் எப்போதுமே இருக்கிறது. புதுமுகங்களை வைத்து இயக்கும்போது எனக்கு எளிதாக இருக்கிறது. நான் நினைத்தபடி அந்தக் கதாபாத்திரத்தைக் கொண்டுவர முடிகிறது.

ராணாவைப் பொறுத்தவரை எங்களது முதல் சந்திப்பிலிருந்தே இந்தக் கதாபாத்திரம் அவரது நட்சத்திர அந்தஸ்தை பிரதிபலிக்காது என்பதில் தெளிவாக இருந்தேன். அவரும் இந்தக் கதாபாத்திரத்துக்காக அர்ப்பணிப்புடன் நடித்தார்.

பொதுவாக நான் வழக்கமான களம் கொண்ட திரைப்படங்களை எடுக்க விரும்பவில்லை. படங்களைப் பார்த்துப் படம் எடுப்பது சிலருக்குப் பழக்கமாகிவிட்டது. அதை மாற்ற நினைத்தேன். அதனால் தென்தமிழ்நாட்டுக்குப் பயணப்பட்டு அங்கிருக்கும் பழங்குடி சமூகத்தினரிடம் பேசினேன். அப்படித்தான் ‘மைனா’, ‘கும்கி’ கதை உருவானது. காடனும் அப்படித்தான் உருவானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே