கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது இந்தியா

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அஸ்ட்ரா ஜெனிக்காவின் கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் ஏற்றுமதியை மத்திய அரசு முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு தற்போது செலுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் கோவிஷீல்டு தடுப்பூசியை புணேவில் உள்ள சீரம் மருந்து நிறுவனமும், கோவேக்சின் தடுப்பூசியை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும் தயாரிக்கின்றன.

இதில், சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி பிரிட்டனின் அஸ்ட்ரா ஜெனிக்கா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பு ஆகும். உள்நாட்டு தேவை போக, உபரியாக இருக்கும் மருந்துகளை மற்ற நாடுகளுக்கும் சீரம் நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. இவ்வாறு பொருளாதாரத்தில் நலிவடைந்த 64 நாடுகளுக்கு இந்த மருந்துகளை இந்தியா அனுப்பி வருகிறது.

இதனிடையே, இந்தியாவில் நடப்பாண்டு தொடக்கத்தில் குறைந்திருந்த கரோனா வைரஸ் பரவல், கடந்த ஒரு மாதமாக மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பூசிகள் செலுத்தும் பணியை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா பரவல் அதிகரிப்பதால் இந்தியாவுக்கு கரோனா தடுப்பு மருந்துகள் கணிசமாக தேவைப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் மத்திய அரசிடம் அண்மையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தனர்.

இதனைக் கருத்தில்கொண்டு, சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பு மருந்தின் ஏற்றுமதியை நேற்று முன்தினம் முதல் இந்தியா முற்றிலுமாக நிறுத்தியது. அதுமட்டுமின்றி, இந்தியாவிடம் கரோனா தடுப்பு மருந்துகளை பெற்று, பல்வேறு ஏழை நாடுகளுக்கு விநியோகித்து வரும் கோவேக்ஸ் கூட்டமைப்புக்கும் அஸ்ட்ரா ஜெனிக்கா மருந்துகள் வழங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளது.

இந்த தகவலை சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கோவேக்ஸ் கூட்டமைப்பு நேற்று தெரிவித்துள்ளது. எனினும், இந்த ஏற்றுமதி நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இந்தியாவின் இந்த நடவடிக்கையால், 64 நாடுகளுக்கு தடுப்பு மருந்துகள் கிடைப்பதில் பெரிய அளவில் சிக்கல் எழுந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே