2 லட்சம் ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படும்: ஸ்விக்கி நிறுவனம் அறிவிப்பு

ஸ்விக்கி நிறுவனம், அந்நிறுவனத்தின் கீழ் உணவு விநியோகப் பணியில் ஈடுபடும் 2 லட்சத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

கரோனா தொற்று அச்சம் காரணமாக உணவு வீடுகளுக்குச் செல்வது குறைந்துள்ளது. ஸ்விக்கி, ஜோமாட்டோ போன்ற செயலிகளின் வழியே உணவுகள் ஆர்டர் செய்யப்படுகின்றன. கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இத்தகைய செயலிகளே உணவு விநியோகம் செய்வதில் முக்கியப் பங்கு வகித்தன. இந்நிலையில், ஸ்விக்கி நிறுவனம் அந்நிறுவனத்தின் கீழ் உணவு விநியோகத்தில் ஈடுபடும் 2 லட்சத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. தடுப்பூசி போடும் நாட்களில் அவர்களுக்கு விடுப்புடன் ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. கரோனா தொற்றுக்கு உள்ளான அதன் விநியோக நபர்களுக்கு ஊதியம் வழங்கி வருவதாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்தைத் தொடர்ந்து ஸ்விக்கி நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே