“தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!” – உண்மையை உடைத்த சரத் பவார்

தோனியை இந்திய அணிக்கு கேப்டனாக்க சச்சின் டெண்டுல்கர்தான் பரிந்துரை செய்தார் என்று பிசிசிஐ முன்னாள் தலைவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் தெரிவித்துள்ளார்.

2005 – 2008 வரை பிசிசிஐ தலைவராக இருந்தார் சரத் பவார். பின்பு ஐசிசி தலைவராகவும் சில ஆண்டுகள் செயல்பட்டார். இப்போது ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், பல்வேறு சம்பவங்களை அவர் நினைவுகூர்ந்துள்ளார். அதில் “2007-ல் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. நானும் அப்போது இங்கிலாந்தில் இருந்தேன். அப்போது டிராவிட் என்னிடம் இனிமேலும் இந்தியாவுக்கு தலைமை ஏற்க நான் விரும்பவில்லை. கேப்டனாக இருப்பதால் என்னுடைய பேட்டிங் திறன் பாதிக்கப்படுகிறது” என்றார்.

மேலும் “தன்னை கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்குப்படியும் டிராவிட் கேட்டுக்கொண்டார். அப்போது நான் உடனடியாக சச்சினிடம் கேப்டன் பொறுப்பை ஏற்குமாறு கேட்டேன். ஆனால், அவரும் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். அப்போது நான் கோபமடைந்து, நீங்கள் இருவருமே மறுத்தால் யாரைதான் பொறுப்பில் அமரவைப்பது என்றேன். அப்போதுதான் சச்சின், தோனியின் பெயரை பரிந்துரை செய்தார். அதன்பின்புதான் தோனியை இந்திய அணியின் கேப்டனாக நியமித்தோம்.

2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்து வெளியேறியது. அதன்பின்பு அந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கு தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டு கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை இந்தியா படைத்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே