தெ.ஆப்பிரிக்காவை ஊதி தள்ளி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபார வெற்றி

கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்த நிலையில் முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி வருகிறது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

தொடர்ந்து முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 41 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களை சேர்த்து. இந்திய பந்து வீச்சாளர்கள் ஜூலான் கோஸ்வாமி 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மற்றொரு பவுலர் ராஜேஸ்வரி கெய்க்வாடும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

158 ரன்களை விரட்டிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரரான ஜெமினா ரோட்ரிகஸ் 9 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதன் பிறகு ஸ்மிரிதி மந்தனாவும், பூனம் ராவத்தும் கூட்டணி அமைத்து 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு இந்தியா 160 ரன்கள் எடுக்க உதவினர். இருவரும் அரை சதம் விளாசினர். இதன் மூலம் இந்தியா இந்த தொடரை 1 – 1 என சமன் செய்தது. எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் வென்றால் இந்தியா தொடரை வெல்லும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே