கல்கி ஆசிரமத்திற்குச் சொந்தமான இடங்களில் 500 கோடி ரூபாய் கணக்கில் காட்டாத வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்திருக்கிறது.
மூன்று நாள் வருமான வரித்துறை சோதனையில் சுமார் 93 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட நாட்டில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்கள் உள்ளன.
அங்கு வரி ஏய்ப்பு நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் 16ஆம் தேதி சோதனையை தொடங்கியது வருமான வரித்துறை. 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டனர்.
சோதனையின் மூன்றாம் நாளில் 44 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பணமும், 18 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 26 கோடி ரூபாய் மதிப்புடைய 88 கிலோ தங்கமும், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தொடர் சோதனையில் 500 கோடி ரூபாய் அளவில் வரி ஏய்ப்பு நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சொத்துக்கள் ஒன்னெஸ் என்ற பெயரில் பல்கலைக்கழகம் என கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமாக 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
கல்கி என்றழைக்கப்படும் விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தொழில் செய்து வரும் கிருஷ்ணாவுக்கு, பெங்களூருவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கட்டுமான நிறுவனம் உள்ளது.
கல்கி ஆசிரமம் மற்றும் கிருஷ்ணாவின் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்த நிலையில் வருமான வரித்துறையின் சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.