கொரோனா நிவாரணத்துக்கு நிதி வசூலிப்பதாகக் கூறி நகை பறிப்பு

சேலம் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் ஒருவரை 4 பேர் சந்தித்து கோரானா நிதி வசூலிப்பதாகக்கூறி அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி பகுதி ராமகிருஷ்ணா சாலையில் அமைந்துள்ள சண்முகா காலணியைச் சேர்ந்த 78 வயதான முதியவர், ரங்கராஜன்.

இவரது வீட்டுக்கு கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு இரவு 8 மணியளவில் நான்கு பேர் வந்து கதவைத் தட்டியுள்ளனர்.

உறவினர்கள் யாரேனும் வந்திருப்பார்கள் என்று எண்ணி கதவையும் திறந்துள்ளார்.

அப்போது, வெளியே நின்றுகொண்டிருந்த நான்கு பேரும் அவரது வீட்டுக்குள் புகுந்து, “ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை வழங்க கொரோனா நிதி வசூலித்து வருகிறோம்.

உங்களால் முடிந்த பணம் அல்லது அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களைக் கொடுங்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதனால், ரங்கராஜனும் பொருள்களை எடுக்க உள்ளே சென்றுள்ளார்.

அரிசி பை ஒன்றை அவர் எடுத்து வரும்போது, அங்கே இருந்த நான்கு பேரும் அவரைத் தாக்கி அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு வெளியில் நின்ற ஆட்டோவில் தப்பித்துச் சென்றுள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த ரங்கராஜன் இந்தச் சம்பவம் குறித்து சேலம் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் திருடர்களைப் பிடிக்க அஸ்தம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்துள்ளார்.

இதுதொடர்பாக நடந்த விசாரணையில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்தி மற்றும் அவரது நண்பர்கள் சேகர், சுகன், கார்த்திகேயன் எனக் கண்டுபிடித்தனர். அவர்களை இன்று கைதும் செய்துள்ளனர்.

அவர்கள் தங்களது வீட்டில் மறைத்து வைத்திருந்த 4 சவரன் நகை மற்றும் ஆட்டோ ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ராமகிருஷ்ணா சாலை சந்திப்பில் இறங்கி நான்கு பேரும் ரங்கராஜன் வீட்டுக்கு நடந்து செல்வது, அவரது வீட்டில் நகையைப் பறித்துக்கொண்டு ஆட்டோவில் ஏறி அப்பகுதியில் இருந்து தப்பிப்பது உள்ளிட்ட காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இந்தக் காட்சிகளை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். தற்போது கைதும் செய்துள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 914 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே