விவசாய நிலங்களின் வழியாக கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்து விட்டு கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணியை அனுமதிப்பதா? அரசின் அறிவிப்பு என்ன ஆச்சு, உடனடியாக விதிமுறைகளை வகுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கை:

‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட கொள்ளிடம் பகுதியில் விவசாய நிலங்களின் வழியாக கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவது கண்டனத்திற்குரியது.

நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் தோண்டியுள்ள சுமார் 20 கிணறுகளில் இருந்து செம்பனார்கோவில் அருகே உள்ள மேமாத்தூருக்கு எரிவாயுவை எடுத்துச் செல்ல 2 ஆண்டுகளுக்கு முன் விளைநிலங்களின் வழியாக குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

‘கெயில்’ நிறுவனம் மேற்கொண்ட அந்தப் பணிக்கு விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள், சூழலியல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தெரிவித்த எதிர்ப்பினால் அப்போதைக்கு நிறுத்தப்பட்டது.

ஆனால், தற்போது கரோனா ஊரடங்கு காலத்திலும் சீர்காழி அருகே உள்ள திருநகரியில் இருந்து பழையபாளையம் வரையிலான புதிய பாதையில் விளைநிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இந்தப் பகுதிகளையும் உள்ளடக்கிதான் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் பழனிசாமி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அறிவித்தார்.

இப்போது அங்கே விளைநிலங்களை 5 அடி ஆழத்திற்குத் தோண்டி எரிவாயு குழாய்களைப் பதித்தால் அது எப்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகும்? இதற்கெல்லாம் ஆதரவு தெரிவிக்கும் விதமாகவே ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை’ என்று தமிழக அரசு கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

முதல்வர் பழனிசாமி வேளாண் மண்டலத்திற்கான அரைகுறை அறிவிப்பை வெளியிட்ட போதே நாம் எழுப்பிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில்தான் தற்போதைய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

வெற்று வேளாண் மண்டல அறிவிப்புக்காக பட்டம் சூட்டிக்கொண்ட முதல்வர் பழனிசாமிக்கு உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருக்குமானால் விளைநிலங்களையும், விவசாயத்தையும் பாதிக்கும் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாவதையும், ஆறுகளில் இருந்து மணல் சுரண்டப்படுவதையும் தடுப்பதற்கான விதிமுறைகளை உடனடியாக வகுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’.

இவ்வாறு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே