அரசியல் நோக்கத்திற்காக அல்லாமல், விவசாயிகளுக்காக போராட்டம் நடத்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

டில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் நடந்த போராட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: விவசாயிகள் போராட்டம் வெற்றி பெறக்கூடாது என அதிமுக செயல்படுகிறது. ஓரவஞ்சனையுடன் பல்வேறு முயற்சிகளை அரசு செய்கிறது.

சேலம் போராட்டத்திற்கு வந்த விவசாயிகள், திமுக தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டம் அரசியல் நோக்கத்திற்காக, கட்சி வளர்ச்சிக்கு, சொந்த நோக்கத்திற்காக அல்ல.

நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளுக்காக நடக்கும் போராட்டம் என்பதை ஆளுங்கட்சி புரிந்து கொள்ள வேண்டும். 

முதல்வரும் இதனை தெரிந்து கொள்ள வேண்டும். ஆளுங்கட்சி சொல்வதை அப்படியே நிறைவேற்றும் போலீசார், இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் ஆட்சிக்கு வரப்போகிறவர்கள் தான்.

இதில் மாற்றம் எதுவும் கிடையாது.

விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, போராடும் விவசாயிகளை அழைத்து பேசி, பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதற்காக இந்த போராட்டம்.

இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் நடக்கிறது.சுதந்திர இந்தியாவில் இதுவரை இது போன்று ஒரு போராட்டம் நடந்தது இல்லை.

வரலாற்றில் இடம்பெறக்கூடிய அளவுக்கு விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகாவில் விவசாயிகள் பங்கெடுத்துள்ளனர். போராட்டத்தின் மூலம் பா.ஜ., அரசை, விவசாயிகள் அசைத்து கொண்டுள்ளனர்.

அவசர அவசரமாக வேளாண் சட்டத்தை பா.ஜ., அரசு நிறைவேற்றியது.”நானும் ரவுடி தான், நானும் ரவுடிதான் ” என்பது போல், ” நானும் விவசாயி தான் ” என முதல்வர் பழனிசாமி புலம்பி கொண்டிருக்கிறார்.

அவர் விவசாயி அல்ல. வேடதாரி. இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே