சென்னையில் இஸ்லாமிய அமைப்புகளின் பேரணி தொடங்கியது!

குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

தமிழக சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்கள் போராட்டத்தின் போது போலீஸார் தடியடி நடத்தியதில் ஏராளமான முஸ்லீம்கள் காயமடைந்தனர்.

இதையடுத்து இந்த தடியடியை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்று 6ஆவது நாளாக சென்னை வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சட்டசபையை முற்றுகையிடும் பேரணி இன்று நடந்து வருகிறது.

இதில் கலைவாணர் அரங்கிலிருந்து பேரணியாக சென்று சட்டசபையை முற்றுகையிட இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

அதன்படி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வாலாஜா சாலையில் திரண்டனர்.

முற்றுகைப் போராட்டத்துக்கு தேசியக் கொடியுடன் வந்துள்ள இஸ்லாமியர்கள் சிஏஏ சட்டத்தை எதிர்த்து முழக்கமிட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர்.

சட்டசபை நோக்கி தொடங்கிய பேரணியில் நிறைவேற்று, நிறைவேற்று, சிஏஏவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்று என கோஷமிட்டனர்.

அது போல் பாஜக ஆளாத மாநிலம் எல்லாம் சிஏஏவை எதிர்க்கிறதே, தமிழகம் ஏன் எதிர்க்கவில்லை எனவும் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே