குவாரிகளில் எடுக்கப்படும் மணல் தனியாருக்கு விற்பனை செய்யப்படுகிறதா?.. பதில் தர அரசுக்கு உத்தரவு!!

தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கும் டெல்டா பகுதிகளுக்கான விதிகள் வரையறுக்கப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.

இதற்கு, டெல்டா பகுதிகளில் உள்ள மணல் குவாரிகளில் எடுக்கப்படும் மணல் அரசு கட்டிட பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறதா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குவாரிகளில் எடுக்கப்படும் மணல் தனியாருக்கு விற்பனை செய்யப்படுகிறதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து உரிய ஆவணங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் பூதலூரைச் சேர்ந்த ஜீவகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார். அதில்,

தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தஞ்சாவூர் மாவட்டம் உள்ளது. தஞ்சாவூர் தாலுகாவில் அச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனவெளி, சாத்தனூர் ஆகிய பகுதிகளிலும், பூதலூர் தாலுக்காவில் மகாராஜபுரம், புதகிரி, வானரங்குடி, கழுமங்கலம், கள்ளபெரம்பூர், கோவிலாடி, சுக்கொம்பார் ஆகிய பகுதிகளிலும் மணல் குவாரிகளில் நடைபெறுகின்றன.

இந்த குவாரிகளில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சென்னம்பூண்டி பகுதியில் அரசு அனுமதியுடன் மணல்குவாரி நடைபெறுகிறது. இங்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் எடுப்பதால் அதிக ஆழத்தில் பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களில் விழுந்து பலர் உயிரிழந்து வருகின்றனர்.

எனவே தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க சோதனை சாவடிகள் அமைத்து, சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கவும், டெல்டா பகுதிகளில் மணல் குவாரிகளுக்கு தடை விதிக்கவும், திருச்சென்னம்பூண்டி அரசு குவாரிக்கு தடை விதித்தும், மணல் கடத்தலுக்கு உதவும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனு முன்னதாக விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதையடுத்து இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே