மீளுமா யெஸ் வங்கி..? அரசு அனுமதியுடன் காப்பாற்ற முன்வந்துள்ள எஸ்.பி.ஐ..!

யெஸ் வங்கிக்கு உதவும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி தனி ஒரு கூட்டமைப்பைத் தொடங்கி யெஸ் வங்கியின் பங்குகளில் ஒரு பகுதியையும் மீட்க முன்வந்துள்ளது.

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நிர்வாகத்தில் நிதி மோசடி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அதிரடி காட்டியது ரிசர்வ் வங்கி.

இந்நிலையில், வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கி, கடந்த ஆண்டு ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.

இதனால், அந்த வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், வங்கியின் மூலதனத்தை பெருக்கவும், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை மீட்டெடுப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் துணை நிர்வாக இயக்குனர் பிரசாந்த் குமார் தலைமையின் கீழ் அடுத்த 30 நாட்களுக்கு யெஸ் வங்கி நிர்வாகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, இந்த ஒரு மாத காலகட்டத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தங்கள் கணக்கில் இருந்து 50ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என கூறியுள்ளது.

இதனால், வாடிக்கையாளர்கள் அச்சமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என தெரிவித்துள்ளது.

மருத்துவம், கல்வி, திருமணம், தவிர்க்க முடியாத அவசர தேவைகளுக்கு வங்கி மேலாளரின் அனுமதியுடன் 5 லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 5 மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்த இந்த நடவடிக்கையால், ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய வாடிக்கையாளர்கள் அவசரம் காட்டியதால், சர்வர் முடங்கியது.

இந்த நிலையில், அரசின் அனுமதி உடன் எஸ்பிஐ வங்கி யெஸ் வங்கியின் பங்குகளை வாங்க உள்ளது. இந்த அறிவிப்புக்குப் பின்னர் பங்குச்சந்தை வர்த்தகத்தில் யெஸ் வங்கி சற்று மேல் எழும் சூழலில் எஸ்பிஐ வங்கியின் பங்குகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து யெஸ் வங்கி மற்றும் எஸ்பிஐ தரப்பில் விளக்கங்கள் ஏதும் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் மூத்த நிர்வாக அதிகாரி கண்ணன் கூறுகையில், “யெஸ் வங்கியின் பங்குகளை எஸ்பிஐ வாங்குவது யெஸ் வங்கியின் உரிமைகளை வாங்குவதற்காக அல்ல. இது ஒரு வகையான முதலீடு மட்டுமே. யெஸ் வங்கியை நிச்சயமாக முழுவதுமாய் வீழ வாய்ப்பில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே